ஆளுநர் ரவி மலிவான அரசியல் செய்கிறார்: முத்தரசன் சாடல்

1 mins read
989498bf-799a-445b-b85d-fc652afa2d08
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் ஆளுநர் மாளிகையை, ஆளுநர் பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி கட்சி செயலகமாக மாற்றியுள்ளார். அத்துடன் அங்கிருந்து கொண்டு மலிவான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.

திரு முத்தரசன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆளுநர் பொறுப்பை ஏற்ற ஆரம்ப காலத்தில் இருந்து அவரது செயல்பாடு கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றது. சில நேரங்களில் உச்ச நீதிமன்றம் கூட ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளது.

சனிக்கிழமை (16.11.2024) ஆளுநர் மாளிகையில் நடைபெறும் திருவள்ளுவர் - கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோர் தொடர்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி முதன்மை விருந்தினராகப் பங்கேற்கும் இந்த நிகழ்வின் அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள வள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது.

வள்ளுவர் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ்கொண்ட தமிழ்நாட்டின் தொன்மை மரபையும் தனித்துவப் பண்பையும் அறியாத ஆர்.என்.ரவி, தனது மதவெறி சார்ந்த மலிவான அரசியல் அடையாளமாகத் திருவள்ளுவரைப் பயன்படுத்தும் முயற்சியைத் தமிழகம் ஒரு போதும் ஏற்காது. ஆளுநரின் அநாகரிகச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்