சென்னை: ஆளுநரின் செயலில் அரசியல் நோக்கம் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்தார்.
அப்போது திரு ஸ்டாலின், ஆளுநர் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார். தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை வாசிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை அரசியல் உள்நோக்கத்தோடு அவமதித்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார் என்று ஆளுநர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேபோல் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும் தமிழ் நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார். மூன்று ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்தார். அதே வேளையில் இன்னும் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் கருணை இருந்தாலும் அதற்கான நிதி இல்லை என்று மாநில நிதி நிலைமை பற்றியும் பேசினார்.