சென்னை: பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவிலிருந்து, ‘ஆளுநர்’, ‘வேந்தர்’ ஆகிய சொற்கள் நீக்கப்பட்டன.
இதுதொடர்பான சட்டத்திருத்தம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பு நிலவுகிறது.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக இருதரப்பும் நேரடி வார்த்தைப்போரில் ஈடுபட்டன.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பரிந்துரைப்பதற்காக, மூவர் அடங்கிய தேடுதல் குழு அறிவிக்கப்படுவது வழக்கம். இக்குழுவில் அரசின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
பல்கலைக்கழகச் சட்டத்தின்படி, ‘வேந்தரான ஆளுநர்’ என்பது பயன்படுத்துவது மரபாக இருந்தது. மேலும், வேந்தரின் பிரதிநிதி அல்லது ஒருங்கிணைப்பாளர் என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்தது.
இந்நிலையில், வேந்தரின் பிரதிநிதி அல்லது உறுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், மதுரை காமராஜர், சிதம்பரம் அண்ணாமலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆகிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துணைவேந்தர் நியமனம் தொடர்பில் முன்பு தமிழக அரசை ஆளுநர் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு, திமுக தரப்பில் அமைச்சர்கள் சிலர் பதிலடி கொடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மோதலின் உச்சமாக, துணை அதிபரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
எனினும், தமிழக அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பலர் அம்மாநாட்டில் பங்கேற்கவில்லை. தமிழக அரசு மிரட்டியதால் துணைவேந்தர்கள் அச்சமடைந்து மாநாட்டைப் புறக்கணித்ததாக ஆளுநர் ரவி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவிலிருந்து ‘ஆளுநர்’ என்ற சொல் நீக்கப்பட்டிருப்பது புது விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

