தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மசோதாக்களுக்கு ஆளுநர் அச்சத்தில் கொடுத்த ஒப்புதல்: மு.க.ஸ்டாலின்

2 mins read
8c720d3f-5e4a-45af-a139-e2510615d3b9
மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி விடும் என்ற அச்சத்தில் சில மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி சொல்லக்கூடிய வகையில், தொடங்கப்பட்ட பிரசாரம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

சமூகநீதி, சாமானியர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான கருணாநிதியின் அரும்பணிகள் போற்றப்படும் என்றும் கொள்கை, சரித்திரச் சாதனை, கலாசார நினைவுகளோடு நம்மோடு வாழ்பவர் கருணாநிதி என்றும் ஸ்டாலின் கூறினார்.

ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மைக்காக போராடியவர் கருணாநிதி என்றார் அவர்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தது எதிர்பார்த்ததுதான் என்றும் அதனால்தான் சட்டப்பேரவையில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது என்றும் ஸ்டாலின் கூறினார்.

“ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை,” என்றார் ஸ்டாலின்.

இதற்கிடையே, உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும் சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும் எனத் தமிழக அரசு கூறியிருந்தது.

இதன் மூலம், 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவர். தற்போது இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னதாக, நேற்று காலை கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

குறிப்புச் சொற்கள்