தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மழையை எதிர்கொள்ள தயார்: தமிழக அரசு

2 mins read
7e748fc1-c18b-4a67-a575-7ce998c6603a
நாடாளுமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: வங்கக்கடலில் தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

டெல்டா மாவட்டங்களுக்கு 26, 27ஆம் தேதிகளில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விரைவில் விடுத்துள்ளது.

கிழக்கு இந்திய பெருங்கடலிலும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக ஞாயிறன்று வலுப்பெற்றுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கட்கிழமை (நவம்பர் 25) காலை தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் இந்த தாழ்வுமண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மழை வருகிறதோ வரவில்லையோ, அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகரில் மறுசீரமைக்கப்பட்ட மழலையர் பள்ளி வகுப்புகளை திங்கட்கிழமை (நவம்பர் 25) பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதானி விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டுமென ராமதாஸ் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் ரீதியாக ஒவ்வொரு நாளும் அறிக்கை வாயிலாக ராமதாஸ் பேசி வருகிறார். அதற்குத் தற்போது பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை,” என முதல் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்சென்னைமழை