விருதுநகர்: பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்தபோது, பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
விருதுநகரில் மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடத் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கள ஆய்வுகள் மேற்கொள்ளவும் இரு நாள்கள் பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் விருதுநகா் சென்றடைந்தார்.
முதல் நிகழ்வாக, விருதுநகரை அடுத்த கன்னிசேரி புதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டாா். பட்டாசு ஆலையின் உரிமம், மூலப்பொருள்கள் வைப்பறை, பட்டாசுகளைப் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டார். அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீடு செய்ய அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், “விருதுநகரில் 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
“அதிகளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனை. பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
“விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் இதற்கு தனி நிதியம் உருவாக்கப்படும். கல்விச் செலவை அரசே ஏற்று நடத்த முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
“வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் திறந்து வைத்த முதல்வர், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் அரங்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.