சென்னை: கோவில்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதற்கு படிப்படியாகத் தடை விதிக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கெனவே இதுபோன்ற தடை திருச்செந்தூர், மதுரை, பழனி கோவில்களில் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கைப்பேசிகளைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அனைத்து கோவில்களிலும் படிப்படியாக நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார் அமைச்சர் சேகர்பாபு.
திருச்செந்தூர் கோவிலில் உள்ள யானையுடன் ‘செல்ஃபி’ எடுக்க முயன்றபோது அதற்கு அந்த யானை அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே தனது பாகனை அந்த யானை தாக்கியது என்றார்.
இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு மேலும் தெரிவித்தார்.

