தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரட்டை குழந்தைகளுடன் சென்ற தாத்தா: விபத்தில் பேத்தி உயிரிழப்பு

1 mins read
ecb7eb23-bea5-4f08-9b97-a99bf48b7a4d
சிறுமியின் தலையிலும் மார்பிலும் ரத்த காயம் ஏற்பட்டது. தாத்தா, பேத்தி ஆகிய இருவருமே தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

சென்னை: தாத்தாவின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதன் ஆக்சிலேட்டரை வேகமாக திருகிய நான்கு வயது பேத்தி விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (67 வயது). இரட்டைக் குழந்தைகளான இவரது பேத்திகள் வார இறுதி நாள்களில் தாத்தா, பாட்டியின் வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

இம்முறை வீட்டுக்கு வந்த இரு பேத்திகளையும் தன் இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார் முதியவர் பத்மநாபன்.

முதலில் குழந்தை நிகாரிகாவை அருகே உள்ள தெருவில் ஒரு கடையின் முன்பு இறக்கிவிட்டு, பின்னர் வீடு திரும்பி, மற்றொரு பேத்தியையும் அழைத்துச் சென்றுள்ளார்.

வாகனத்தில் சென்றபோது அந்தச் சிறுமி இருக்கைக்கும் கைப்பிடிக்கும் இடையே நின்று கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி வண்டியின் ஆக்சிலேட்டரை திருகியதாகத் தெரிகிறது.

இதனால் அந்த வாகனம் திடீரென வேகமெடுக்க, அதைக் கட்டுப்படுத்த இயலாமல் முதியவர் பத்மநாபன் தடுமாறியுள்ளார். இறுதியில் அவர் சுதாரிப்பதற்குள் அந்த வாகனம் கீழே விழுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிறுமி நிகாரிகாவின் தலையிலும் மார்பிலும் ரத்த காயம் ஏற்பட்டது. தாத்தா, பேத்தி ஆகிய இருவருமே தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி நிகாரிகா தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்