சென்னை: எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முதலில் விருப்பம் இருக்க வேண்டும் என உலகச் சதுரங்க வெற்றியாளர் குகேஷ் கூறியுள்ளார்.
“இலக்கு சரியாக இருந்தால்தான் வெற்றியும் சரியாக அமையும்,” என்று அவர் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசும்போது குறிப்பிட்டார்.
உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ் திங்கட்கிழமை சென்னை திரும்பியபோது பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
குகேஷ் படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி வரவேற்ற பின்னர் சதுரங்க அட்டை போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு காரில் குகேஷ் அழைத்துச் செல்லப்பட்டார்.
“எதைச் செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். சதுரங்கம் என்பது சிறந்த விளையாட்டு. எனவே அதைக் காதலுடன் விளையாடுவேன்.
“உலகச் சாம்பியன் போட்டியின்போது நல்லது நடக்கும் என்று நினைத்தேன்.
“விளையாட்டு வீரர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிப்பதுடன் எனக்கு நிறைய உதவிகள் செய்யும் தமிழக அரசுக்கு நன்றி,” என குகேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.