திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்வு நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
மகா சிவராத்தரி தினத்தில், திருவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டில் பக்தர்கள் விரதம் இருந்து கலந்துகொண்டு அப்பம் வாங்கி உண்டால் உடல் நோய்கள் தீரும், குழந்தைப்பேறு கிடைக்கும், வீட்டில் செல்வங்கள் செழிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அப்பம் சுடும் நிகழ்ச்சிக்காக 40 நாள்கள் விரதமிருந்து, தொன்றுதொட்டு கடந்த 35 ஆண்டுகளாக வெறுங்கைகளினால் அப்பம் சுட்டு வழங்கி வரும் முத்தம்மாள் பாட்டி, இந்த ஆண்டும் பக்தர்களுக்கு வெறுங்கைகளினால் அப்பம் சுட்டு வழங்கினார்.
ஏழு கூடைகளில் அப்பம் சுட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அம்மனுக்கு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து முத்தம்மாள் பாட்டியும் கோவில் பூசாரிகளும் கொதிக்கும் நெய்யை பக்தர்களின் நெற்றியில் பூசி ஆசி வழங்கி அப்பத்தை பிரசாதமாக அளித்தனர்.