தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம்: சீமான்

2 mins read
6310ce99-520e-424b-8dbb-14c3309baafd
சீமான். - படம்: ஊடகம்
multi-img1 of 2

மதுரை: ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம் என்பதை உணராதவரை நாட்டின் பொருளியல் வளராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் மதுரையில் ஆடு மாடுகள் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், ஆடு மாடுகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

“ஆடு மாடுகள் இன்றி இயற்கை விவசாயம் கிடையாது. பால் இருக்கும் வரை நாட்டில் பசி, பட்டினி இருக்காது.

“தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டர் மேய்ச்சல் நிலம் உள்ளது. ஆனால் அவற்றை ஆக்கிரமித்து அழித்துவிட்டனர்.

“ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் கோடி மதிப்புள்ள பால் சந்தை உள்ளது. ஆனால் வெறும் ரூ.50,000 கோடி சந்தை மதிப்புள்ள சாராயத்தைக் குடிக்க வைத்து தாய்மார்களின் தாலியை அறுக்கின்றனர்,” என்றார் சீமான்.

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் செல்வதால் கால்நடைகள் குடிக்க நீரின்றி தவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதலே ஆடு, மாடுகள் மனித வாழ்வியலோடு ஒன்றிவிட்டதாகக் கூறினார்.

“காலுக்குக் காலணியாகவும் தோளுக்குத் தோல் பையாகவும் மாடுகளின் தோல் பயன்படுகிறது. ஆனால், அவை உண்பதற்கு வைக்கோல் இல்லை. மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை உண்கின்றனர். அவையோ காகித சுவரொட்டிகளையும் நெகிழிக்கழிவுகளையும் உண்கின்றன,” என்றார் சீமான்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி தேனி மலையடிவாரத்துக்கு தாமே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் அவர் அறிவித்தார். இம்மாநாட்டில் பார்வையாளர்களுக்கான பகுதியில் ஆடு, மாடுகள் முதலில் நிறுத்தப்பட்டிருந்தன. அதன் பின்தான் கட்சியினருக்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்