சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.31 கோடி மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள வனப்பரப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் சார்பாக, செடிகளை நடவு செய்து வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள மொத்த வனப்பரப்பு எவ்வளவு என்றும் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில், இது எத்தனை விழுக்காடு என்றும் தகவலறியும் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்குப் பதில் அளித்துள்ள பசுமை தமிழ்நாடு இயக்கம், இக்குறிப்பிட்ட கேள்வி தொடர்பான எந்த அறிக்கையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த பதில் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிர காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மட்டும் பசுமை தமிழ்நாடு இயக்கத்துக்கு ரூ.37.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு கேள்விக்கு, தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டு 1.31 கோடி மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டுள்ளதாக பசுமை தமிழ்நாடு இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.