சென்னை: தமிழகத்தின் 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளதாக அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுார், திருவாரூர், நாகை, சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக நீர்வளத்துறையின் கீழ் செயல்படுகிறது நிலம் மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம். இதன் சார்பில் மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த ஆய்வு அறிக்கையின்படி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
சென்னை தவிர, மற்ற 37 மாவட்டங்களில் கண்காணிப்புக் கிணறுகளை அமைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.