தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும்

வள்ளுவர், வள்ளலாரைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்கிறது: ஸ்டாலின்

2 mins read
e207b351-afb1-4749-b918-09e382a62477
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21)  திறந்துவைத்தார். - படம்: தமிழக ஊடகம்

சிவகங்கை: வள்ளுவர், வள்ளலாரைப் பாதுகாக்க ஒவ்வொரு தமிழனும் அரணாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“வள்ளுவர், வள்ளலார் போன்ற சமத்துவம் பேசிய மாமனிதர்களைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்துகொண்டு இருக்கிறது. அதற்கு எதிரான காவல் அரணாக ஒவ்வொரு தமிழனும் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் லட்சுமி வளா்தமிழ் நூலகத்தை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் இந்நூலகம் கட்டப்பட்டுள்ளது.

“கல்வி மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவது மாநில அரசு. வேந்தர் பதவியை மட்டும் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஒருவருக்கு வழங்குவதா. மாநில கல்வி உரிமையை மீட்கும் பணியில் சட்ட, அரசியல் போராட்டங்கள் தொடரும்,” என்று நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் கூறினார்.

“இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 35 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 34 விழுக்காடாக உயர்ந்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.

“நூலகங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும். எனக்குப் பரிசாக வந்த 2 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கி உள்ளேன். திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பின் எனக்கு புத்தகங்களை மட்டும் பரிசளிக்கக் கூறினேன். அதனை நூலகங்களுக்கு அனுப்புவேன் என்றேன்.

“இதுவரை என் கைக்கு 2.75 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. அதனை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். கொடையுள்ளமும், அறிவுத்தாகமும் கொண்டவர்கள் தங்கள் ஊர்களில் நூலகம் அமைக்க வேண்டும்,” என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்