ஜிஎஸ்டி வரிக்குறைப்பு ராகுலின் ஆலோசனைதான்: காங்கிரஸ்

1 mins read
a0ca1f0a-b532-4519-b99a-0f4a7e9dddc1
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அறிவித்திருப்பது காங்கிரஸ் தலைவர் ராகுலின் ஆலோசனைதான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செப்டம்பர் 3ஆம் தேதி நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கழகக் கூட்டத்தில், ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் நான்கு வகையான ஜிஎஸ்டி முறையில் இரண்டை நீக்கி விட்டு, 5%, 18% ஆகிய இரு நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் பால் பொருள்கள், குழந்தைகளுக்கான பொருள்கள், மின்னணுச் சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறைகிறது. வருகிற செப். 22 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த வரிக்குறைப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இருப்பினும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் இத்தனை ஆண்டு காலம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகபட்சமாக 18% ஆக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2016 ஆம் ஆண்டில் வலியுறுத்தினார். ராகுல் காந்தியின் இந்த எக்ஸ் பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்