சென்னை: உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய குகேஷ் தொம்மராஜுக்கு, 18, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் சீனாவைச் சேர்ந்த டிங் லிரனை வீழ்த்தி குகேஷ் அண்மையில் வெற்றியாளர் பட்டத்தைப் பெற்றார்.
14 சுற்றுகள் அடங்கிய உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில், 13 சுற்றுகள் வரை டிங் லிரன் - குகேஷ் தலா 6.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.
விறுவிறுப்பாக நடந்த 14வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரனை வீழ்த்தி குகேஷ் வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.
இந்நிலையில், உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்று திங்கட்கிழமை (டிசம்பர் 16) சென்னை திரும்பினார் குகேஷ்.
விமான நிலையத்தில் கூடியிருந்தவர்கள் மலர்களைத் தூவி குகேஷை வரவேற்றனர். அதோடு, குகேஷுக்கு தமிழ்நாடு அரசாங்கம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணையச் செயலர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் குகேஷை வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து அவர் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த காரில் புறப்பட்டுச் சென்றார்.