கடலூர்: புதுவையில் இருந்து மதுபானங்களைக் கடத்தி வந்தால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் காவல்துறை எச்சரித்துள்ளது.
இதன் மூலம் கடத்தல் சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
“மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் முறையாக சோதனை செய்து, சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். தொடர் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்.
“குற்றம் செய்யும் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபானம் கடத்துவோர் மட்டுமல்லாமல், விற்பனை செய்வோரும் கைது செய்யப்படுவார்கள்,” என்றார் திரு ஜெயக்குமார்.
தமிழகத்தில் டாஸ்மாக அரசு நிறுவனம் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது. நடப்பாண்டில் மது விற்பனையளவு இலக்காக ரூ.50 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மது வகைகளால் டாஸ்மாக் வருவாய் குறைவதாக அந்நிறுவனம் கூறி வருகிறது.
இதையடுத்து, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

