விழுப்புரம்: துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் நட்பு நிமித்தம் தம்மைச் சந்தித்துப் பேசியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக உட்கட்சிப் பூசலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையே சமரசம் ஏற்பட பல்வேறு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் அண்மையில் ராமதாசை சந்தித்துப் பேசினர். குருமூர்த்தி பாஜக ஆதரவாளர் என்பதால் சமரச முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திரு ராமதாஸ், தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை செல்லவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
சென்னையில் உள்ள தனது இளைய மகள், கொள்ளு பேரன் உள்ளிட்டோரைச் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
“கணக்காய்வாளர் குருமூர்த்தியுடன் எனக்கு நீண்ட நாள் நட்பு உள்ளது. அதனை மதிக்கிறேன். அதேபோல் சைதை துரைசாமியுடனும் பல ஆண்டுகளாக எனக்குப் பழக்கம் உண்டு.
“அந்த நட்பின் அடிப்படையில் இருவரும் என்னைச் சந்திக்க வந்தனர்,” என்றார் ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்திற்கு நேரில் வந்து சந்தித்துப் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “அன்புமணி வந்தார், பேசினார். அதுகுறித்த விவரங்களைப் பிறகு சொல்கிறேன்,” என்று சுருக்கமாகக் கூறிவிட்டுப் புறப்பட்டார்.