சென்னை: தமிழகத்தில் சிகை மாற்று சிகிச்சை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த மையங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மருத்துவ, ஊரக நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
போலி மருத்துவர்கள், தரமற்ற கருவிகளைக் கொண்டு சிகை மாற்று சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி, சென்னையில் உள்ள தனியார் மையத்தில் மருத்துவ, ஊரக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 12ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இரண்டு பேர், மருத்துவர் என்ற பெயரில் சிகை மாற்று சிகிச்சைகளை அளிப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மூன்று பேர் கைதாகினர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் செயல்படும் இதுபோன்ற சிகிச்சை மையங்களைக் கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எனினும், இந்த நடவடிக்கையைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற மையங்கள், அழகு நிலையங்கள் என்ற அடையாளத்துடன் செயல்படுவதால் அவற்றை மருத்துவத் துறை கண்காணிப்பதில்லை.
இதைப் பயன்படுத்தி போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் இந்தச் சிக்கல் முடிவுக்கு வரும். அதன் பிறகு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


