சென்னை: குவியும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு அபாயம்

சென்னை: குவியும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு அபாயம்

2 mins read
c4c1fa87-4f55-49d5-9a33-c50d711d8acb
சென்னை, மேத்தா நகரில் சாலையோரம் அப்புறப்படுத்தப் படாமல் கிடக்கும் குப்பைகள். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. அதன் காரணமாகத் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. மழை நின்றாலும் மழை நீரால் அடித்து வரப்பட்ட குப்பைகள் பல இடங்களை அசுத்தமாக்கி விட்டுச் சென்றுள்ளன.

பல இடங்களில் அப்புறப்படுத்தப் படாத முறிந்து விழுந்த மரக்கிளைகளைக் காண முடிவதாகக் கூறப்படுகிறது. மேலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததில் வீணாய்ப் போன பொருள்கள் பல சாலைகளிலும் சாலை ஓரங்களிலும் உள்ள குப்பைத் தொட்டிகளில் காணப்பட்டன.

குறிப்பாக, அரும்பாக்கம் கால்வாய் ஓரம் குப்பைகள் குவிந்து காணப்பட்டன. பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி விட்டதால், குப்பைகள் குப்பைத் தொட்டிகளுக்கு அருகே விட்டுச் செல்லப்படுகின்றன.

குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகள் அப்புறப் படுத்தப்படாததால், மக்கள் தெரு ஓரமாகக் குப்பைகளைக் கொட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் குறை கூறி வருகின்றனர். இதனால், குப்பை கொட்டும் இடங்களிலும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர், “மழைக்குப் பிறகு, பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டன.

“சில இடங்களில் குப்பைகளை அகற்றும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குப்பைகளை அகற்றுவது தொடர்பான புகார்களை 1913 தொலைபேசி எண் மூலமாகவும், ‘நம்ம சென்னை’ ஸ்மார்ட் கைப்பேசி செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்