திருச்சி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மாலை 5.40 மணிக்குத் திருச்சியிலிருந்து 141 பயணிகளுடன் ஷார்ஜாவுக்குப் புறப்பட்டது. சற்று தூரம் உயரே பறந்ததும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தின் சக்கரங்கள் விமானத்திற்கு உள்ளே இழுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை விமானி கண்டறிந்தார்.
இதுகுறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
அவசரமாகத் தரையிறக்கப்படுவதற்கு முன், விமானத்தில் உள்ள எரிபொருளைக் குறைப்பது பாதுகாப்பானது என்ற வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி, வானில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்தபின், இரவு 8.30 மணிக்குத் திருச்சி விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார் விமானி.
இதையடுத்து விமானி மற்றும் விமானப் பணியாளர்களைத் தமிழகத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். மேலும், அவர்களுக்குச் சமூக ஊடகங்களிலும் பாராட்டுகள் குவிகின்றன.
அவசரகாலத்தின்போது பயணிகளின் நல்வாழ்வை உறுதிசெய்து, அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் குழுவினர் பின்பற்றிப் பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கியுள்ளனர் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு பாராட்டியுள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும் பாராட்டுகளை அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுமார் ஆறு மணி நேர சுணக்கத்திற்குப் பிறகு வேறொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் ஷார்ஜா புறப்பட்டுச் சென்றனர். அதில் 109 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். 35 பயணிகள் அச்சம் காரணமாகப் பயணத்தைத் தவிர்த்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “விமானப் பணியாளர்களால் அவசர நிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் தரையிறக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தரையிறங்குவதற்கு முன், ஓடுபாதையின் நீளத்தைக் கருத்தில் கொண்டு எரிபொருளையும் எடையையும் குறைக்க, நியமிக்கப்பட்ட பகுதியில் விமானம் பலமுறை வட்டமிட்டது. தொழில்நுட்பக் கோளாற்றுக்கான காரணம் குறித்து முறையாக விசாரிக்கப்படும்.
“இந்தச் சம்பவத்திற்கு வருந்துகிறோம், மேலும் எங்கள் செயல்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.