சென்னை: இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் குளிர்ந்தது. சென்னைப் புறநகர்ப் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி, ஒரு பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. மேலும், பருவ மழையும் முன்கூட்டியே தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தபோதிலும், சென்னையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வரை, புழுக்கமாக (வெக்கை) இருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) இரவு பெய்யத் தொடங்கிய மழை, விடிய விடியப் பெய்தது. இதனால் மாநகரின் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி:
சென்னை புறநகர்ப் பகுதியில் இவ்வாறு தேங்கியிருந்த மழைநீர் மீது மின்கம்பி ஒன்று விழுந்ததை அறியாமல், அவ்வழியே சென்ற வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த அவரது குடும்பத்தாரும் அப்பகுதி மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், பம்மல், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை நீடித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் வடமேற்கு வங்கக் கடலில் ஒடிசா-மேற்கு வங்கக் கரைக்கு அப்பால், இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், புதுவை, காரைக்காலில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஏரிகள் நீர்மட்டம் உயர்வு:
இதனிடையே, சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர், சென்னை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
புழல் ஏரி, சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை உள்ளிட்ட ஏரிகளின் ஒட்டுமொத்த நீர் இருப்பு தற்போது 7,821 மில்லியன் கன அடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நீர் இருப்பு 5,262 மில்லியன் கன அடியாக மட்டுமே இருந்தது.
கடந்த சில நாள்களாக கொட்டித் தீர்த்த மழை காரணமாக, தமிழகத்திற்கு ஓராண்டில் வழங்க வேண்டிய காவிரி நீரை, 81 நாள்களில் கர்நாடகா வழங்கியுள்ளது.