சென்னை: சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த, பலத்த இடியுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் அக்டோபர் 16ஆம் தேதியும் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கையும் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில், 25 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் 480க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாகப் பெய்த மழையில் 300க்கும் அதிகமான இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
ஏராளமான இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. ஐந்து சுரங்கப் பாதைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் அவை மூடப்பட்டன.
இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் மழை பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அவர் தன் கைப்பட தேநீர் விநியோகித்தார்.
மேலும், “தன்னலம் பாராமல் உழைக்கும் அந்தப் பணியாளர்களுக்கு நான் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்,” என்று முதல்வர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஒருசில இடங்களில் அதி கனமழையும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.