சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 26) இரவு பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையால் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப்.26ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதன்கிழமை காலை 8.30 முதல் வியாழக்கிழமை காலை 5.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 7.42 மி.மீ மழையும் மேனம்பாக்கத்தில் 7.12 மி.மீ மழையும் பதிவாகின.
தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் புதன்கிழமை இரவு மழை பெய்தது.
புதுடெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 12 விமானங்கள் தரையிறங்க மிகவும் தாமதமானதால் திருச்சி - சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

