கனமழை; நிவாரண முகாம்கள், அம்மா உணவகங்களில் 15.88 லட்சம் பேருக்கு உணவு

1 mins read
c2c346a4-6015-4a1f-818e-8dd34f54cf1b
அம்மா உணவகங்களில் மட்டுமே 1.28 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: அண்மைய சில நாள்களாகப் பெய்த கனமழையின்போது கடந்த 16,17ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் அம்மா உணவகங்களில் மட்டுமே 1.28 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் ஆக மொத்தத்தில், 15.88 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் கடந்த 16, 17ஆம் தேதிகளில் பொதுமக்களுக்கு கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்றும் மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இது பெரும் உதவியாக அமைந்தது என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அம்மா உணவகங்களில் கடந்த 16ஆம் தேதி காலை இட்லி, பொங்கல், பிற்பகலில் பல்வேறு கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. இரண்டு வேளையும் 78,000 பேர் உணவு பெற்று பயனடைந்தனர். மாலையில் 29,000 ஏழைகளுக்கு சப்பாத்தி வழங்கப்பட்டது.

“சென்னை மாநகரம் முழுவதும் 304 மழைக்கால முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றின் மூலம் 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்தது.

“மேலும் சென்னையில் உள்ள 22,000 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது,” என்றும் அரசு செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்