நடுபழனி முருகர் கோவில் மரகதச் சிலை திருட்டு

நடுபழனி முருகர் கோவில் மரகதச் சிலை திருட்டு

2 mins read
8121b140-1572-4d1a-b9e6-a3c3531cfae7
கடந்த 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த 2.5 அடி உயர மரகத முருகர் சிலையைத் தரிசிக்க நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். - கோப்புப் படம்: நடுபழனி கோவில்/இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

செங்கல்பட்டு: பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத முருகர் சிலை நள்ளிரவில் திருடப்பட்டது குறித்து செங்கல்பட்டு காவல்துறை விசாரித்து வருகிறது.

அங்குள்ள அச்சிறுப்பாக்கம், பெருக்கரணை கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ‘நடுபழனி’ மரகத தண்டாயுதபாணி திருக்கோவில்.

அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலையை ஏராளமானோர் பயபக்தியுடன் வழிபட்டுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) நள்ளிரவு வேளையில் அச்சிலை திருடப்பட்டுள்ளது.

மைசூரைச் சேர்ந்த கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அறக்கட்டளை மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டு, கடந்த 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த 2.5 அடி உயர மரகத முருகர் சிலையைத் தரிசிக்க நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.

கடந்த செவ்வாய்க்கிழமை கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கதவுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல், கோவிலில் அமைக்கப்பட்டிருந்த 16 கண்காணிப்புக் கேமராக்களின் இணைப்பைத் துண்டித்ததுடன், பாதுகாப்பு எச்சரிக்கை கருவிகளையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.

மேலும், காவல்துறையிடம் சிக்காமல் இருக்க கேமரா பதிவுகள் அடங்கிய ‘டிவிஆர்’ கருவி, அங்கிருந்த வெள்ளிப்பொருள்களையும் எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய தலா ஐந்து காவலர்கள் கொண்ட ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அண்மையில் பிணையில் வெளிவந்த பழைய சிலைக்கடத்தல் குற்றவாளிகளின் பட்டியலைத் தயாரித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்