நாகப்பட்டினம்: சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்க நாகை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அம்மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்நடவடிக்கை உதவும் என மாவட்ட நிர்வாகம் கூறியது.
டெல்லியைச் சேர்ந்த ஜெயம் ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான இடத்தில் 10,000 சதுர அடியில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக வேளாங்கண்ணியைச் சுற்றி 25 கிலோ மீட்டர் வான் பரப்பளவில் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஹெலிகாப்டரில் ஆறு பேர் வரை பயணம் மேற்கொள்ள முடியும். இந்தப் பயணத்தின்போது வேளாங்கண்ணி பகுதியைச் சுற்றிப் பார்க்க பத்து நிமிடங்களுக்கு, ஒரு நபருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர் பயணத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதன் பின்னர் சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்தும் நேரடிச் சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜெயம் ஏவியேஷன் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சாலை வழி செல்ல ஏறக்குறைய மூன்று மணி நேரமாகிறது. ஹெலிகாப்டர் சேவை தொடங்கியதும் இந்தப் பயண நேரம் 45 நிமிடங்களாகக் குறையும்
தமிழக அரசின் இந்த நடவடிக்கை வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிமாநிலச் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் சுற்றுலாத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சுற்றுலாப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பேரிடர் மேலாண்மை, மருத்துவ அவசரக் காலங்களுக்கும் பயன்படும் வகையில் ஹெலிகாப்டர் சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


