சென்னை: தமிழக அரசின் திட்டங்களில் ‘உயிருடன் உள்ள’ அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆளுங்கட்சியின் சின்னத்தையோ கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் தேர்தல் ஆணைய உத்தரவுகளுக்கும் முரணானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம், தமிழக அரசு புதிதாக தொடங்கவுள்ள திட்டங்கள், ஏற்கெனவே தொடங்கி செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எதிராக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
முன்னதாக, தமிழக அரசின் திட்டங்களில் உயிருடன் உள்ள தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழக அரசு தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் மருத்துவம்’ உள்ளிட்ட சில திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் பெயரில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குத் தடை விதிக்கக் கோரியே நீதிமன்றத்தை அணுகினார் அதிமுக எம்பி சண்முகம்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்களில் தமிழக முதல்வரின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.
“தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள், அதுதொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள திமுக சித்தாந்த தலைவர்களான கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோரது பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது,” என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக சில விளக்கம் தேவை எனக்கோரி அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளார்.