நிதானத்துடன் பேசுங்கள்: சீமானுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்து

2 mins read
59e42904-1cbf-4931-b722-da4b3689484e
வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாவதிலிருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. - படம்: ஊடகம்

சென்னை: அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அறிவுறுத்துமாறு அவருடைய வழக்கறிஞருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க மறுத்த நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கவும் மறுத்துவிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின்போது தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார் சீமான்.

அப்போது, மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை இன, தேச துரோகி எனக் குறிப்பிட்டு, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக சீமான்மீது கஞ்சனூர் காவல் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் புகாரளித்திருந்தார். அவ்வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், அவ்வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு அளித்திருந்தார்.

அவரது மனு வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) விசாரணைக்கு வந்தது.

அப்போது, “சீமான்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் சீமான் போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை,” என்று கூறிய நீதிபதி வேல்முருகன், அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், “கடந்த ஆறு மாதங்களாகவே தலைவர்களைத் தாக்கும் வகையிலேயே சீமான் பேசி வருகிறார். அதுபோன்று பேசக்கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கும்படி சீமான் தரப்பு வழக்கறிருக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது,” என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகி வழக்கை எதிர்கொண்டால்தான் அப்படிப் பேசுவதை சீமான் நிறுத்துவார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்