சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்க விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022ல் நடைபெற்ற தேர்தலில் தலைவராக நாசரும் பொதுச் செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுடைய பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், சங்க கட்டடக் கட்டுமானப் பணிகளைக் காரணம் காட்டி, நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளித்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்காமலும் முறையான விசாரணை இன்றியும் தன்னிச்சையாகப் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்து, உடனடியாகத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி, இதுகுறித்து தமிழக அரசும் நடிகர் சங்க நிர்வாகிகளும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 1ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
