அத்திவரதர் குளத்தைத் திறப்பது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

அத்திவரதர் குளத்தைத் திறப்பது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
4943f6f8-77b4-471e-849b-82eb2359073c
மனுதாரரின் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து கோவில் நிர்வாகம் தகுந்த முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தை திறப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்குமாறு கோவில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள உள்மண்டபத்தில் அத்திவரதர் அனந்த சயனக் கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே எடுக்கப்படும் அத்திவரதர், கடந்த 2019ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் மீண்டும் குளத்திற்குள் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு புனித நீராடுதல் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்ள அனந்தசரஸ் குளத்தைத் திறந்துவைக்க உத்தரவிடக் கோரி, சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தத்தா தேசிக திருவம்சத்தார் சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முக்கியமான புனித நாள்களில் குளத்தைத் திறக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில், கோவில் நிர்வாகம் குளத்தை மூடி அடிப்படை மத உரிமைகளைத் தடுப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த கோவில் நிர்வாகம், “குளத்தைத் திறந்தால் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூட வாய்ப்புள்ளதால் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது. குளத்தின் புனிதமும் கெட்டுவிடும்,” என எதிர்ப்பைத் தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, “புனித நாள்களில் மட்டும் குளத்தைத் திறக்கலாம் என 2020ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மனுதாரரின் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து கோவில் நிர்வாகம் தகுந்த முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்