மதுரை: கட்டுமான பொருள்களின் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை ஒழுங்குபடுத்த மாநில அளவில் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடிதம் அனுப்ப உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் பெரியகிளுவச்சி கந்தசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சிவகங்கை, புதுக்கோட்டையில் கட்டுமான பொருள்களின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
“இதற்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை. குவாரிகளுக்கு வழங்கிய ஒப்பந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.பல்வேறு கட்டுமான ஒப்பந்த பணியை செயல்படுத்துவதில் ஒப்பந்ததாரர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். கட்டுமான பொருள்களின் முந்தைய விலை அடிப்படையில் தற்போதைய ஒப்பந்தப் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
“அரசு மற்றும் இதர திட்டப் பணியை மேற்கொள்ள குவாரி பொருள்கள், இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை தடுத்து ஒழுங்குபடுத்த மாநில அளவில் குழு அமைக்க வேண்டும். அரசின் திட்டப் பணியை நிறைவேற்ற ஏலத்தில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்களுக்கு விலை உயர்வு பற்றி முன்னறிவிப்பு செய்யக்கோரி தமிழக கனிமவளத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். அதன்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி உள்ளிட்ட அமர்வு கனிமவளத்துறை முதன்மைச் செயலர், ஆணையர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆட்சியர்களுக்கு இது குறித்து பதில் அளிக்குமாறும் தற்போதைய நிலை குறித்து மார்ச் 25ல் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.

