சென்னை: தமிழகம் முழுவதும் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை வரும் ஜூலை 2ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம், கொடிக்கம்பங்கள் தொடர்பாக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதி இளந்திரையன், ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்னிலையாகி, நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, பெரம்பலூர், நெல்லை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் 100% கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
மற்ற மாவட்டங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, பொது இடங்களில் வைக்கப்படும் கொடிக்கம்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர், கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதை உறுதிசெய்து அனைத்து மாவட்ட ஆட்சியரும் ஜூலை 2ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இல்லையெனில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத ஆட்சியர்கள், அன்றைய தினம் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் தமது உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.