சென்னை: அரசு ஏற்கெனவே கையகப்படுத்திய 284 ஏக்கர் நிலத்தில் மதுபான ஆலை செயல்படுவது சட்டவிரோதம் என்றும் அந்நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம், மதுரவாயல் மோகன் மதுபான ஆலை நிறுவனத்திற்குச் சொந்தமான 284 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்த உத்தரவிட்டது. அவ்விடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் புதிய ராமாபுரம் திட்டத்தின்கீழ் வீடுகளைக் கட்ட முடிவுசெய்தது.
அதனை எதிர்த்து, தங்கள் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு எனக் குறிப்பிட்டு, மதுபான ஆலை நிர்வாகம் கடந்த 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அவ்வழக்கைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்ய, மதுபான ஆலை மேல்முறையீடு செய்தது.
புதிய ராமாபுரம் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், இப்போதுவரை அந்நிலம் தங்களிடமே உள்ளது என்றும் நிலத்தைத் திரும்பப் பெற தங்களுக்கு முழு உரிமை உள்ளது என்றும் மதுபான ஆலை கோரியது.
ஆனால், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்றும் நிலத்திற்கான இழப்பீடும் 1985ஆம் ஆண்டே உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுவிட்டது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, மதுபான ஆலையின் கோரிக்கையை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அத்துடன், அரசு கையகப்படுத்திய நிலத்தில் தனியார் மதுபான ஆலை செயல்படுவது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்நிலத்தை ஆலையிடமிருந்து மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அந்த 248 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அவர்கள் உத்தரவிட்டனர்.