சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த விவரங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திங்கட்கிழமை (மார்ச் 16) காலை அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை பொது விடுமுறை நாள்கள் தவிர, மற்ற நாள்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான நேரம்,” என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எந்த வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கு இருக்கிறது என்பதை மக்கள் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி விவரங்கள் தொடர்பாக ஏற்கெனவே விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
“வாக்களிக்கும் இடத்தில் கைப்பேசிகளுக்கு அனுமதி இல்லை. வாக்குச்சாவடிகளில் கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைக்க பெட்டக வசதி செய்து தரப்படும்.
“சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
“சோதனைகளின்போது பொதுமக்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
“மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டுள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரே நாளில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“பெரிய அளவிலான மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்,” என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

