சென்னை: சபரிமலை ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய இசை நிகழ்ச்சியை நடத்திய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், சபரிமலை ஐயப்பனைப் பற்றி சர்ச்சைக்குரிய பாடலைப் பாடியதாக கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காவல்துறையில் அக்கட்சி புகார் அளித்துள்ளது.
சபரிமலை ஐயப்ப சுவாமி குறித்து அண்மையில் மக்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஒரு பாடல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் அப்பாடலை நீலம் கலாசார மையம் நடத்திய நிகழ்ச்சியில் பாடகி இசைவாணி பாடியதாகவும் இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி மாநிலத் தலைவர் சுசீலா தேவி புகார் எழுப்பியுள்ளார்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் மட்டுமல்லாமல், சமூக நல்லிணக்கம், அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் அந்தப்பாடலின் வரிகள் அமைந்துள்ளதாக சுசீலா தேவி சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்தப் பாடல் மக்களிடையே வெறுப்புணர்வையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் மனங்களையும் பக்தைகளையும் வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் உள்ளது,” என்று சுசீலா தேவி காவல் துறையில் அளித்த புகார் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

