தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ வேலையைச் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை

2 mins read
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
43f4ff03-2306-4cf8-be6c-e6603146738b
கோப்புப் படம் - ஊடகம்

மதுரை: வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, “இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை முறையாகப் பராமரிப்பது இல்லை. ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ வேலையை மட்டும் நன்றாகச் செய்கிறது,” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் கூறியுள்ளனர்.

சென்னை வேங்கைவாசலைச் சேர்ந்த வழக்கறிஞர் எலிபன்ட் ராஜேந்திரன் என்பவர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர்கள் நியமனம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

ராமநாத சுவாமி கோயிலில் 12 குருக்களும் 19 உதவி குருக்களும் பணியில் இருக்கவேண்டும் என்றும் தற்போது 2 குருக்கள், 7 உதவி குருக்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 100 கோடி ரூபாய் வருமானத்தில் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை கவனம் செலுத்துகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ராமநாதசுவாமி கோவிலில் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு? பணியாளர்களின் ஊதியம், பராமரிப்புப் பணி போக மீதமுள்ள தொகை எவ்வளவு? அத்தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது? என்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையரும் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலின் செயல் அலுவலரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்