தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

2 mins read
78e577e2-3006-4397-b1dc-234758395936
புதன்கிழமை (ஜனவரி 1) இரவு இறைச்சி சாப்பிட கூண்டிற்குள் வந்தபோது சுமார் 8 வயது சிறுத்தை சிக்கியது. - படம்: தமிழக ஊடகம்

ஓசூர்: கிருஷ்ணகிரியில் ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள், சிறுத்தை, புலிகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடவிசாமிபுரம் அடுத்துள்ள சனத்குமார் ஆற்றின் கரையோரப் பகுதியில் சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்து கொண்டு அப்பகுதியில் அடிக்கடி ஆடுகளையும் நாய்களையும் அடித்து இழுத்துச் சென்றது.

இதே பகுதியில் சிறுத்தை தொடர்ந்து முகாமிட்டிருந்ததால், குட்டிகளுடன் சிறுத்தை இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதி வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்தனர். கண்காணிப்புக் கருவியைப் பொருத்தி கண்காணித்து வந்தனர்.

ஆனால், சிறுத்தை கூண்டில் சிக்காத நிலையில், அங்கிருந்து இடம்பெயர்ந்து வழிமாறி கடந்த சில மாதமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே சந்திராபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

அப்போது வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முயன்றனர். ஆனால், சிறுத்தை கிணற்றிலிருந்து தப்பித்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து பேரிகை அடுத்த புலியரசி கிராமத்தையொட்டி உள்ள செட்டிப்பள்ளி காப்புகாட்டிற்கு இடம்பெயர்ந்தது. அங்கு வனத்துறையினர் மரத்தில் கண்காணிப்புக் கருவி பொருத்தி கண்காணித்து வந்தனர்.

கடந்த ஓராண்டாக வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்காமல் பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக மீண்டும் அடவிசாமிபுரம் பொன்னாங்கூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.

வன உயிரினப் பாதுகாவலர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் தலைமையில் வனத்துறையினர் ஏற்கெனவே வைத்திருந்த கூண்டில் இறைச்சி வைத்து கண்காணித்து வந்த நிலையில் புதன்கிழமை (ஜனவரி 1) இரவு இறைச்சி சாப்பிட கூண்டிற்குள் வந்தபோது எட்டு வயதுச் சிறுத்தை சிக்கியது. இதனையறிந்து சுற்றி உள்ள கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்