வளர்ச்சிப் பாதையில் ஓசூர்; ரூ.24,307 கோடி முதலீட்டை ஈர்க்கும் திட்டங்கள் கையெழுத்து

2 mins read
d2178d87-92fb-44b0-b88b-ad7be27317f1
ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். - படம்: இந்திய ஊடகம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டை ஈர்க்கும் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் ஏறக்குறைய 50,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 23,303.15 கோடி முதலீட்டில், 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ. 1,003.85 கோடி முதலீட்டில் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

நிகழ்ச்சியில் ரூ.250 கோடியில் தயாரான மூன்று முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன் ரூ.1,210 கோடி மதிப்படப்பட்டுள்ள நான்கு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட 9,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உயர்தர ஆராய்ச்சி மையங்களின் மையமாக ஓசூரை உருவாக்கத் திட்டமுள்ளதாக நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் கூறினார்.

“ஓசூரில் ரூ.400 கோடி மதிப்பில் டைட்டில் பார்க் நிறுவப்பட இருக்கிறது. ஓசூர் விமான நிலையத்தை உருவாக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த விமான நிலையம் ஓசூரை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லும். பிற மாநிலங்களுக்குச் சவால் விடும் நகரமாக ஓசூர் வளர்ந்துள்ளது,” என்றார் அவர்.

அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 9, 10ஆம் தேதியில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு, பொருளியல் வளர்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்றால் தொழில் வளர்ச்சிதான் அடிப்படை. அதனால்தான் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் எடுத்து வருகிறது என்று ஸ்டாலின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்