திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கோரி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை (டிசம்பர் 13) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, திடீர் பிரச்சினை வெடித்துள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.
எனினும், கோவில் நிர்வாகம் இந்த உத்தரவை நிறைவேற்றாத நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடும் செய்தது.
மேலும், காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, தீபம் ஏற்ற யாரையும் அனுமதிக்க முடியாது என்று அறிவித்தது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இந்நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என உள்ளூர் மக்கள் அறிவித்து இருந்தனர்.
இதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிசம்பர் 13ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், இப்போராட்டத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், முழக்கங்கள் எழுப்பக் கூடாது, மந்திரங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும், உண்ணாவிரதப் போராட்டத்தைக் காணொளியாகப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தார்.
அந்த நிபந்தனைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றி போராட்டத்தை நடத்துவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

