இணையக் குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து மாநிலங்களில் வேட்டை; பத்து பேர் கைது

இணையக் குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து மாநிலங்களில் வேட்டை; பத்து பேர் கைது

2 mins read
6b746876-b7d7-4853-ae56-824dc3a1fc66
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு ஆகியவை இணைந்து இந்தத் தனிப்படைகளை அமைத்தன.  - கோப்புப் படம்: ஈடிவி பாரத்

சென்னை: சென்னையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் இணையவழி நிதி மோசடி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய அமைக்கப்பட்ட நான்கு தனிப்படை காவல்துறையினர், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அதிரடி வேட்டை நடத்தி 10 பேரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு ஆகியவை இணைந்து இந்தத் தனிப்படைகளை அமைத்தன.

தொழில்நுட்பத் தகவல்கள், வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா, குஜராத், புதுடெல்லி ஆகிய மாநிலங்களுக்குச் சென்று முகாமிட்ட தனிப்படையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு 10 பேரைக் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் தொடர்புடைய ஆறு வெவ்வேறு வழக்குகளில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் ரூ.24.54 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42.72 லட்சம் பணம், எட்டுக் கைப்பேசிகள், சிம் அட்டைகள்கள், வங்கி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்களில் எட்டு பேர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இருவருக்குச் சட்டப்பிரிவு 35(3)ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மோசடிப் பணப்பரிமாற்றம், அதில் தொடர்புடைய பிற இடைத்தரகர்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களைக் குறிவைத்து இணைய மோசடிக் கும்பல், பல்வேறு போலி வாக்குறுதிகளை அளித்து பல நூறு கோடி ரூபாய் சுருட்டியது. இந்த மோசடியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எங்கு பதுங்கியிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்