தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவி கடப்பிதழ் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
508da8d2-fc4a-494a-9d39-c52031647e01
சென்னையைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்மணி, கடப்பிதழ் கோரி, கடந்த ஏப்ரல் மாதம் மண்டல கடப்பிதழ் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். - படம்: ஊடகம்

சென்னை: திருமணமான பெண்கள் இனி கடப்பிதழ் பெறுவதற்கு கணவரின் கையெழுத்தோ, அனுமதியோ பெறத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

சென்னையைச் சேர்ந்த ரேவதி என்ற பெண், கடப்பிதழ் கோரி கடந்த ஏப்ரல் மாதம் மண்டல கடப்பிதழ் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

எனினும், தனது விண்ணப்பம் குறித்து அவர் விசாரித்தபோது, கணவரின் கையெழுத்தைப் பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியதாகத் தெரிகிறது.

இதனால் வருத்தம் அடைந்த ரேவதி, கணவரின் கையெழுத்தின்றி கடப்பிதழ் வழங்கக் கேட்டபோது, அந்த அதிகாரி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

விவாகரத்து கோரியுள்ள நிலையில், கணவரின் கையெழுத்தின்றி தமக்கு கடப்பிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தை அணுகினார் ரேவதி.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கணவரின் அனுமதி, கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை, ஆணாதிக்க முறையைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.

இந்த நடைமுறையை வலியுறுத்துவதன் மூலம், கடப்பிதழ் மண்டல அலுவலக அதிகாரி, பெண்களைக் கணவரின் உடைமையாகக் கருதும் சமூகத்தின் மனப்பான்மையைப் பிரதிபலிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

“கணவருடன் பிரச்சினை உள்ள நிலையில், கையெழுத்து பெறுவது இயலாது. திருமணமாகிவிட்டால், பெண் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடுவது இல்லை.

“எனவே, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்து கடப்பிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடப்பிதழுக்கு விண்ணப்பிப்போர் தங்களின் வாழ்க்கைத் துணையின் பெயரைக் கடப்பிதழில் சேர்க்கவும் நீக்கவும் புதிய நடைமுறையை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அண்மையில் வெளியிட்டது.

மணமானோர், தங்களின் வாழ்க்கைத்துணை குறித்த தகவலைக் கடப்பிதழில் சேர்க்க பின்பற்றிவந்த நடைமுறை சிக்கலானதாக இருந்தது. அதை எளிதாக்க ‘இணைப்பு ஜெ’ (Annexure J) எனும் புதிய பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்