சுகாதாரச் சீர்கேடுக்கு நான் காரணமல்ல: சூரி வேதனை

2 mins read
55e04e95-3a6e-4339-8c40-8d65a96d6d37
சூரி, அம்மன் உணவக முகப்பு. - படங்கள்: ஊடகம்

ஏழை மக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வரும் தனது ‘அம்மன் உணவக’ நிர்வாகத்தின் மீது சிலர் வீண் பழி சுமத்துவதாக நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

தனது உணவகத்தில் லாப நோக்கம் இன்றி, குறைந்த விலையில், தரமான உணவு தரப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனையில் இவரது ‘அம்மன் உணவகம்’ இயங்கி வருகிறது. இதேபோல் மேலும் சில தொண்டு நிறுவனங்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாகவும் குறைந்த விலையிலும் உணவு விநியோகித்து வந்தனர்.

இந்நிலையில் ஏழைகளுக்கு உணவு விநியோகிப்பதில் மோதல் எழுந்துள்ளது. மேலும் சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு வருவதாகவும் பலர் புகார் அளிக்கவே, அரசு மருத்துவமனைக்கு உள்ளே சென்று உணவு விநியோகிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

எனினும் இந்த உத்தரவும்கூட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு நடிகர் சூரியும் அவரது அம்மன் உணவக நிர்வாகமும்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

எந்தவிதமான காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்படுகிறது என்பது தெரியவில்லை என நடிகர் சூரி கூறியுள்ளார்.

“மதுரை அரசு மருத்துவமனையில் அம்மன் உணவகத்தின் கிளை, சேவை நோக்கத்துக்காகவே திறக்கப்பட்டது. எனது தாயார் ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு அங்கு சரியில்லாத உணவு வழங்கப்பட்டதால் தரமான உணவை, குறைந்த விலையில் வழங்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்.

“அதைத்தான் செய்து வருகிறேன். மருத்துவர்களும் நோயாளிகளும் ஒரே சமயத்தில் உணவருந்தும் வகையில் தரமாகச் செயல்படுகிறோம். அந்த அளவுக்கு, சேவை மனப்பான்மையுடன் நான் மற்றவர்களுக்கு உணவு வழங்குவதை எனது உணவக நிர்வாகமே தடுக்குமா?

“நடிகர் சூரியின் உணவகம் என்ற ஒரே காரணத்துக்காக சிலர் வதந்தி கிளப்புகின்றனர். இது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

“மதுரை அரசு மருத்துவமனையில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டதற்கும் எனக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்பது மட்டுமே உண்மை,” என நடிகர் சூரி மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்