சென்னை: தங்குவதற்கு வீடின்றி தவிப்பதால் சென்னை நீலாங்கரைப் பகுதியில் உள்ள வீட்டில் தங்குவதற்கு தவெக நடிகர் விஜய் அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், கோடி கோடியாகச் சம்பாதித்தும் விஜய் தனக்கும் குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது.
ஏற்கெனவே அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல்கள் எழத் தொடங்கியுள்ளன. அவரது மனைவி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ள தகவல் அண்மையில் வெளியானது.
இதனால் விஜய் ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விஜய், நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் சென்று பங்கேற்றார்.
இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா தனக்கும் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய சொத்துகளை விஜய் நியாயமான முறையில் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
“வீடின்றித் தவிக்கும் எனக்கு விவாகரத்து வழக்கு முடியும் வரை சகல வசதிகளுடன் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வழங்க வேண்டும்.
“என்னை வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் மறுத்து வருகிறார். எனவே, நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்,” என்று சங்கீதா தனது மனுவில் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விஜய் வசித்து வரும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது என்று சங்கீதா குறிப்பிட்டுள்ளதை தமிழிசை சுட்டிக்காட்டி உள்ளார்.
“சங்கீதா சிரமத்தில் இருக்கிறார். கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அது தடுக்கப்பட வேண்டும்,” என்று தமிழிசை கூறியுள்ளார்.
இதனிடையே, சமூக ஊடகங்களில், “பிரபலம் என்பது யார்?” என்ற கோணத்தில் இடம்பெற்றுள்ள துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகாவின் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
அதில், “நீங்களும் உங்கள் மீதான மக்களின் பார்வையும்/புரிதலும்தான் உங்களை ஒரு பிரபலமாக்குகிறது. ஆனால், ‘மக்களின் பார்வைதான் நான்’ என்று நினைத்து உங்களின் சுயத்தை நீங்கள் இழக்கும்போது நீங்கள் கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று குறிப்பிட்டுள்ளார் கிருத்திகா.

