தர்மபுரி: பாமக உட்கட்சிப்பூசல் நாளுக்குநாள் பெரிதாகி வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சரியாகத் தூங்க முடியவில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் நடந்த பாமக கட்சிக் கூட்டத்தில் முதல்முறையாக கட்சித் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டது குறித்து அவர் பேசினார்.
“எனக்குள் தினமும் பல கேள்விகள் எழுகின்றன. நான் என்ன தவறு செய்தேன்? தூங்குவதற்கு முன்னரும் பின்னரும் என்ன தவறு செய்தேன், ஏன் மாற்றப்பட்டேன்? என்ற கேள்விகள்தான் மனத்தில் உள்ளன.
“நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை,” என்றார் அன்புமணி.
பாமக நிறுவனத் தலைவர் ராமதாசின் லட்சியத்தை நிறைவேற்றுவதுதான் தமது நோக்கம், லட்சியம், கனவு எல்லாம் என்றார் அவர்.
இவ்வளவு காலமாக, ராமதாஸ் சொன்னதை அனைத்தும் செய்து முடித்த தம்மால் இனியும், ராமதாஸ் சொல்வதை, நிச்சயமாக ஒரு மகனாக, கட்சியின் தலைவராக செய்து முடிக்க இயலும் என்றும் அது தமது கடமை என்றும் அன்புமணி கூறினார்.