தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

2 mins read
d06eda40-72de-4dab-85f5-9368a666e22f
அமைச்சர் எ.வ.வேலு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகப் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் மற்றும் சென்னையில் அவருக்குத் தொடர்புடையவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

சென்னை, திருவண்ணாமலை, கரூர், விழுப்புரம், கோவை எனப் பல ஊர்களில், ஒரே நேரத்தில் 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தமிழக ஊடகத் தகவல்கள் கூறின.

வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட நகை, பணம், சொத்து ஆவணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறை அதிகாரிகள் கூறினர்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் அமைச்சர் வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறைச் சோதனை இடம்பெற்றது நினைவுகூரத்தக்கது.

அமைச்சர் வேலின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் மட்டும் 10 கல்வி நிறுவனங்கள், ஆறாயிரம் ஏக்கர் நிலம், பஞ்சாலை, கிரானைட் நிறுவனம், நிதி நிறுவனம் ஆகியவை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அண்மையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், வருமான வரித்துறைச் சோதனை குறித்து அமைச்சர்களை எச்சரித்திருந்ததாகத் தகவல் வெளியானது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு வருமான வரித்துறைச் சோதனை மூலம் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயலில் இறங்கலாம் என்றும் அதனால் அமைச்சர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது.

அவர் எச்சரித்த சில நாள்களிலேயே அமைச்சர் வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்