சென்னை: தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை நடிகர் விஜய் சேதுபதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தான் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டு வந்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அவர் கூறி உள்ளார்.
அண்மையில் ரம்யா மோகன் என்பவர், தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை விஜய் சேதுபதி பல ஆண்டுகள் பாலியல் இன்பத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் இது தொடர்பாக அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் தன்னைச் சிறிதளவேனும் அறிந்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டைக் கேட்டுச் சிரிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னை எனக்குத் தெரியும். இதுபோன்ற மோசமான குற்றச்சாட்டுகள் என்னைப் பாதிக்காது. ஆனால், என் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுகிறார்கள். ஆனால் நான் அவர்களிடம், ‘கவனத்தை ஈர்க்கவே இந்தப் பெண் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார், சில நிமிடப் புகழைப் பெறுவார், அதை அனுபவிக்கட்டும்’ என்று கூறினேன்,” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தான் நடித்த படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு அவதூறு பரப்புவதன் மூலம் அப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என சிலர் நினைத்திருக்கக்கூடும் என்றும் ஆனால் அவ்வாறு நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய சூழலில் ஒரேயொரு சமூக ஊடகக் கணக்கு இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் எதையும் கூறலாம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

