சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கழகத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் நேரம் நம்மிடையே இருக்கும் அன்பை இன்னும் பலமடங்கு கூட்டப் போகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
“உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும்விதமாக நம் வெற்றிக் கழகத் திருவிழாவைக் கொண்டாடுவோம். அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்குப் பெருந்திரளாக அனைவரும் வரவேண்டும். உங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்,” என அந்த அறிக்கையில் திரு விஜய் குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் வருகைக்காக வி.சாலையில் இரு கரங்களை விரித்து, இதய வாசலைத் திறந்து காத்திருப்பேன். வாருங்கள், மாநாட்டில் கூடுவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வெற்றி நிச்சயம்,” என மாநாட்டிற்கு அக்கட்சித் தொண்டர்கள் அனைவரையும் வரும்படி அழைத்துள்ளார்.