யார் தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன்: விஜய்

யார் தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன்: விஜய்

2 mins read
d59d846a-0824-4bb6-85c6-bcde07d90e35
முதல்வர் விஜய். - படம்: தி எக்கானமிக் டைம்ஸ்

சென்னை: தனது தலைமைத்துவத்தில் அமைந்துள்ள புதிய அரசாங்கம், யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக ஞாயிற்றுக்கிழமை (மே 10) பொறுப்பேற்றுக் கொண்ட அவர், தமிழகத்துக்குப் புதிய தொடக்கம் அமைந்துள்ளது என்றும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தாம் அளித்துள்ள பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என்று குறிப்பிட்ட அவர், முந்தைய ஆட்சியாளர்கள் அரசுக்கு பத்து லட்சம் கோடி ரூபாயைக் கடன் சுமையாக வைத்துச் சென்றுள்ளனர் என்றார்.

தவெக ஆட்சியில் தாம் மட்டுமே ஒரேயோர் அதிகார மையம் என்று தெரிவித்த அவர், தனக்கு இணை, துணை என யாரும் கிடையாது என்றார்.

“எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், அனைத்தையும் சரி செய்வேன். தமிழக மக்கள் என்னை நூறு விழுக்காடு நம்பலாம்.

“நாம் பதவிக்கு வந்துவிட்டோம், இனி எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்திருந்தால் இப்போதே அவர்கள் மனத்தில் இருந்து அந்த எண்ணத்தை அழித்துவிடலாம்,” என்று பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் விஜய் திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என அனைவரின் முகம்தான் தனது முகம் என்றும் முகத்தை மூடிக்கொண்டு தாம் யாரையும் சந்திக்கப் போவதில்லை என்றார் அவர்.

“என் வலி, வேதனைகளை தொண்டர்களும் அனுபவித்தனர். மக்கள் பணத்தை தொடமாட்டேன். தவெக தொண்டர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாருங்கள் புதிய அரசை நடத்திக்காட்டுவோம். நல்லதே நடக்கும், நம்பிக்கையாக இருங்கள்,” என்றார் விஜய்.

குறிப்புச் சொற்கள்