கோவை: பாஜக மாநிலத் தலைவருக்கான போட்டியில் தாம் இல்லை என்று நடப்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக வட்டாரங்களில் சலசலப்பு நீடிக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலமே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைவது உறுதியாகிவிட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் மன வருத்தமடைந்த அண்ணாமலை பதவியிலிருந்து விலக இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மத்திய அமைச்சராக்கப்படுவார் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாஜக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என தெரிவித்துள்ளார்.
“புதிய தலைவருக்கான போட்டியில் நான் யாரையும் கைகாட்டவில்லை. பாஜகவில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டி போடுவதில்லை. எல்லாரும் இணைந்து தலைவரை தேர்ந்தெடுப்போம்.
“பாஜக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்பது உட்பட ஏற்கெனவே விரிவாக பேசி இருக்கின்றோம். இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை,” என்றார் அண்ணாமலை.
புதிய மாநில தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், கட்சித் தொண்டனாக தமது பணி தொடரும் என்றார்.